ஓடும் காரில் இருந்து குதித்து ‘கிகி’ நடனம் நடிகை ரெஜினா மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்

கிகி நடனத்துக்கு தூண்டுவதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ரெஜினா மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஓடும் காரில் இருந்து குதித்து ‘கிகி’ நடனம் நடிகை ரெஜினா மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்
Published on

கனடாவை சேர்ந்த பிரபல பாடகர் டிரேக் வெளியிட்ட ஸ்கார்பியன் என்ற இசை ஆல்பத்தில் இடம்பெற்ற கிகி பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற நகைச்சுவை நடிகர் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதனை உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் சவாலாக ஏற்று ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட பல்வேறு நடிகர்நடிகைகள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை கலக்கிய கிகி சவால் நடன விளையாட்டு இப்போது இந்தியாவிலும் நுழைந்து இருக்கிறது. இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து குதித்து கிகி பாடலுக்கு ஆடிய வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த நடனத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த மரண நடனத்தை ஆட வேண்டாம் என்று பல்வேறு மாநிலங்களில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மீறி ஆடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களை கிகி நடனத்துக்கு தூண்டுவதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ரெஜினா மற்றும் இந்தி நடிகைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com