

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ரோஜா, அரசியலில் குதித்தார். ஆந்திரா சட்டசபையில் எம்.எல்.ஏ., மந்திரி பதவிகளும் வகித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் 'அன்பே டயானா' படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி ரோஜா கூறும்போது, "நான் என்றுமே சினிமாவை விட்டு போனதாக நினைக்கவில்லை. இருந்தாலும் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தீவிர அரசியலில் இருக்கும் எனக்கு புத்துணர்ச்சி தருவதே சினிமாதான். இந்தமுறை அழுத்தமாக வந்திருக்கிறேன். இன்னும் 3 ஆண்டுகள் தொடர்ந்து படங்கள் நடிக்கப் போகிறேன்.
சினிமா பிரபலங்கள் மீது எப்போதுமே அரசியல்வாதிகளுக்கு பொறாமை இருக்கும். பிரசாரத்துக்கு பாசத்துடன் அழைப்பார்கள். ஆனால் தேர்தலில் குதித்தால் ஒன்றுசேர்ந்து விரட்டியடிக்க பார்ப்பார்கள். அந்தவகையில் நிறைய போட்டி, பொறமைகள், சதிகளை பார்த்துள்ளேன். ஏன் தமிழகத்திலேயே விஜய்க்கு நடந்ததே... இப்போது அவர் முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அது சரியில்லை, இது சரியில்லை என்று பேசத்தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் எல்லாம் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார்கள். அரசியல் பழகி மக்களுக்கு நல்லதும் செய்தார்கள். அந்தவகையில் சொன்னதை செய்தால் விஜய்க்கு நல்ல எதிர்காலம் உண்டு. அரசியலில் இளைஞர்கள் அதிகம் வரவேண்டும்”, என்றார்.