

எஸ்.எஸ். ஸ்ரீகார்த்திக் இயக்கும் புதிய படத்தில் ருக்மணி நாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘காந்தாரா’ படத்துக்கு பிறகு, இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக உயர்ந்திருக்கிறார், ருக்மிணி வசந்த். ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மதராசி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை நடிகை ருக்மணி வசந்த் கொள்ளை கொண்டார். தற்போது அவர் நடிகர் யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் தற்போது நிவின்பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘மங்கள கவுரி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ருக்மணி வசந்த்.
தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ். ஸ்ரீகார்த்திக் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார்.
தமிழில் ‘கணம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் எஸ்.எஸ். ஸ்ரீகார்த்திக், தற்போது தனது அடுத்த புதிய திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இப்படத்தில் பிரபல நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநரும், தயாரிப்புக் குழுவினரும் இணைந்து உருவாக்கிய ஒரு கலகலப்பான விளம்பர வீடியோவுடன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ‘தாரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகையைத் தேர்வு செய்ய வேண்டிய அழுத்தத்தில் படக்குழுவினர் இருக்கின்றனர்.
அப்போது, ஒரு ரோபோடிக் கேமரா, பெண் முன்னணி நடிகையின் பெயரைப் பரிந்துரைக்கிறது. அது வேறு யாருமல்ல, திறமையான நடிகை ருக்மணி வசந்த் என அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சிரூனி சினை கார்பரேஷன்ஸ் மற்றும் மாட் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், கதைக்களம் மற்றும் படத்தின் தலைப்பு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.