‘‘சூர்யா ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி’’ நடிகை சாய் பல்லவி பேட்டி

‘‘சூர்யா ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று நடிகை சாய் பல்லவி கூறினார்.
‘‘சூர்யா ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி’’ நடிகை சாய் பல்லவி பேட்டி
Published on

ஐதராபாத்,

மலையாளத்தில் வசூல் குவித்த பிரேமம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிகின்றன. சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தனுஷ் ஜோடியாக மாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க பேச்சு நடக்கிறது.

சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:

சிறு வயதில் இருந்தே நடனத்தில் விருப்பம் இருந்தது. படித்துக் கொண்டே நடனம் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவுக்கு வருவது பிடிக்கவில்லை. மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கு அனுப்பி விட்டார்.

மலையாள டைரக்டர் அல்போன்சா எனக்கு போன் செய்து அவர் இயக்க உள்ள பிரேமம் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார். மகிழ்ச்சியாக இருந்தது. படிப்புக்கு பாதிப்பு வராத வகையில் விடுமுறை நாட்களில் மட்டுமே நடிப்பேன் என்ற நிபந்தனையுடன் அந்த படத்தில் நடித்தேன்.

எனக்கு முகப்பருக்கள் இருந்தன. ஆனாலும் மேக்கப் போடாமலேயே டைரக்டர் என்னை நடிக்க வைத்தார். படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. எனது முகப்பருக்கள் முகத்துக்கு அழகு கொடுத்ததாக படம் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெண்கள் மேக்கப் போட அவசியம் இல்லை. அவர்களுக்கு இயற்கையாக உள்ள அழகுடன் வந்தால் தன்னம்பிக்கை ஏற்படும் என்பதற்கு நான் நடித்த கதாபாத்திரம் உதாரணமாக இருந்தது.

அதன்பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சூர்யா எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கல்லூரியில் படித்தபோது நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறினார்கள். எனக்கு காதலில் விருப்பம் இல்லை. நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com