

நடிகை சனம் ஷெட்டி நேற்று பேசியிருந்தது சர்ச்சையை எழுப்பி இருந்த நிலையில் இன்றைக்கு போராட்ட களத்தில் அதற்கான விளக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் வெளியிட்டனர்.
நீட் தேர்வில் நடைபெற்றத முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. அந்தப் படத்தை முதலமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பார்த்து கொண்டாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதே நேரத்தில், மாணவர் போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, நடிகை சனம் ஷெட்டி வெள்ளிக்கிழமை இரவு போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேடையில் பேசிய அவர், "இது மாணவர்களின் போராட்டம். இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்கள்தான் ஜோக்கர்கள்; நாங்கள் அல்ல. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்தேன்" என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு போராட்டத்தில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பேச்சை நிறுத்துமாறு வலியுறுத்திய நிலையில், "நான் பேசவா, போகவா?" என்று சனம் ஷெட்டி கேட்க, "போய்விடுங்கள்" என்று போராட்டக்காரர்கள் பதிலளித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சனம் ஷெட்டி, "இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். யாரும் சொல்லி நான் இங்கு வரவில்லை. மாணவர்களுக்காக பேசவே வந்துள்ளேன்" என்று கூறினார்.
தொடர்ந்து எதிர்ப்பு நீடித்ததால் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, "நான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம். வெற்றி மாறன் உட்கார்ந்து இருக்கிறாரே.. அவர் எத்தனை படங்கள் எடுத்துள்ளார். அவரையும் ஜோக்கர் என்றுதான் சொல்கிறீர்களா? இந்த மேடையை அரசியல் அஜெண்டாவுக்காக பயன்படுத்த யாராக இருந்தாலும் நான் அனுமதிக்க மாட்டேன். ஆயிரம் பேர் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. ஜனநாயகத்திற்காக அவர்கள் போராடவில்லை. அவுங்க ஏஜெண்டா வைத்துதான் போராடுகிறார்கள். இந்த வலையில் வீழ்ந்து விடாதீர்கள். என்னோட தனிப்பட்ட கருத்துதான் நான் பேசுவேன்.நான் இவர்களுடைய கைப்பாவையா... பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்காத இவர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்” என ஆவேசமாக பேசினார்.
நடிகை சனம் ஷெட்டி நேற்று பேசியிருந்தது சர்ச்சையை எழுப்பி இருந்த நிலையில் இன்றைக்கு போராட்ட களத்தில் அதற்கான விளக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் வெளியிட்டனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிர்வாகி பாரதி “6வது நாளாக இன்று போராட்டம் நடக்கிறது. 10 பேருடன் தொடங்கி நேற்று 5 ஆயிரத்துக்கு மேலானோர் இங்கு வருகை தந்தனர். நேற்று பல கட்சித் தலைவர்கள், திரைக்கலைஞர் வந்து ஆதரவு தெரிவித்தனர். பா.ரஞ்சித், வெற்றி மாறன், ஆண்ட்ரியா என பலர் உரையாற்றியுள்ளனர். அரசியல் தலைவர்கள் பிற கட்சியினரை தாக்கி பேசுவதை ஓரளவு நாங்கள் தடுத்துள்ளோம். இங்கு பேசும் பலர் குறிப்பிட்ட கட்சியையும், தலைவர்களையும் விமர்சிக்கின்றனர். அவர்கள் பேசும்போது நாங்கள் மைக்கை பிடுங்கினால் கருத்துரிமையை பறிப்பது போல் ஆகிவிடும். இந்த போராட்டத்தை எந்த கட்சியும் கைப்பற்ற முடியாது. யாராக இருந்தாலும் இளைஞர்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
நேற்று நடிகை சனம் ஷெட்டி இங்கு வந்து மைக்கை வாங்கியவுடன் எத்தனை மாணவர்கள் இங்கு இருக்கின்றனர். எத்தனை பேர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர் என கேள்வி கேட்டார். என்ன அதிகாரத்தோரனை அது... சர்வாதிகார மனோபாவம் அது. அதை நாம் ஏற்க முடியுமா?. இங்கு உரையாற்றுவோர் யாருடைய ஏஜெண்ட் என கேட்டார். அதனால் கூட்டத்தில் இருந்து எதிர்க்குரல் எழுந்தது. அவரது நோக்கம் போராட்டத்தில் குழப்பம், சலசலப்பு, நெருக்கடியை உண்டு செய்து இங்கும், தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டத்தை கலைப்பதுதான் அவரது நோக்கமாக இருந்ததாக சந்தேகம் எழுகிறது. பாசிச பாகவுக்கு எதிரான போராட்டம் இது. பாஜக அல்லாத அனைத்து கட்சியினரும் இதை ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.