'ஜனநாயகன்'படத்தில் வாய்ப்பு..."உதவி இயக்குனர் ஏமாத்திட்டாங்க" - நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ

2012-ம் ஆண்டு வெளியான 'அம்புலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி.
சென்னை,
திரைத்துறையில் 2012-ம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, அப்படத்தின் உதவி இயக்குனரால் அலைக்கழிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி வீடியோ பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில், 'விஜய்யின் ரசிகையாக, 'ஜனநாயகன்' அவரின் கடைசி படம் என்பதாலும் இனி அவருடன் நடிக்க முடியாது என்பதாலும் அப்படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 6 மாதங்களாக பல முயற்சிகளை செய்தேன்.
அப்போதுதான் அப்படத்தின் துணை இயக்குனர் ஒருவரின் நம்பர் கிடைத்தது. அவர் வாய்ப்பு இருக்கிறது, கூடிய சீக்கிரத்தில் முடிவாகி விடும் என்றார். இப்படியே எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
இப்போது அவரிடம் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருப்பதால் , இப்போவாவது இயக்குனரின் நம்பர் கொடுங்கள், கதாபாத்திரம் கொடுங்கள், கொடுக்காமல் போங்கள், அவரை 2 நிமிடம் சந்தித்து பேசி கொள்கிறேன் என்றேன்.
அதற்கு அவர் வாய்ப்பே இல்லை என்றார். எதற்காக இப்படி அலைய வைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் ஒரு சின்ன துணை இயக்குனர் என்றும் பரிந்துரைக்கும் அளவுக்கு தனக்கு பவர் இல்லை என்றும் சொன்னார்
தளபதிக்கு நிச்சயமாக இந்த விஷயம் தெரிய வாய்ப்பில்லை. அவருடைய கவனத்திற்கு வருவதற்காகதான் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளேன்' இவ்வாறு கூறினார்.






