

மும்பை
பாலிவுட் நடிகை சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜா தம்பதிக்கு கடந்த மார்ச்சில் 2-வது ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து கூறினர்.
கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூர், ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு, முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டினர்.
இந்த நிலையில், தங்களுடைய 2-வது குழந்தைக்கு சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி ருத்ரலோக் என பெயர் சூட்டியுள்ளனர். இதுபற்றிய தகவலை சோனம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். 2-வது மகனின் பெயர், புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடிகை சோனம் கபூர் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தம்பி மற்றும் பிரபல இந்தி நடிகரான அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். கணவரை கரம் பிடித்ததும், டெல்லியில் உள்ள லுட்யன்ஸ் பகுதியில் ஆனந்தின் 3 ஆயிரத்து 170 சதுர அடி கொண்ட, ரூ.173 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா வீட்டில் சோனம் கபூர் வசித்து வருகிறார்.