

பெங்களூர்,
அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் நிபுணன். இந்த படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது அந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த சுருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.
சுருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. சுருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள் என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை சுருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
இந்த நிலையில் நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.