

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பதோடு விஜய் ஆண்டனியே தயாரித்தும் உள்ளார். இவருக்கு ஜோடியாக சுவாசிகா நடித்துள்ளார். இவர்களோடு லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், அஜய் திஷன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவ அடிப்படையில் இப்படம் உருவாகியுள்ளது. டீசர் மற்றும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை உருவாக்கியுள்ளது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இதனிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து திரை பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சுவாசிகாவின் நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். இயக்குநர் மிஸ்கின் பட விழாவில் காலில் விழுந்து பாராட்டினார். அதே போல் பார்த்திபன் தனது யூடியூப் சேனலுக்கு நேர்காணல் செய்ய அழைத்து பூ கொடுத்துப் பாராட்டியிருந்தார். மேலும் தற்போது திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் படக்குழுவினரை பாராட்டினர். பின்பு செய்தியாளர்கள சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, “இதுவரை 20 படங்கள் நடித்துவிட்டேன். அதில் படம் நன்றாக இருக்கிறது, நல்ல கதை எனப் பாராட்டுவார்கள். என்னுடைய நடிப்பை யாரும் பாராட்டியது கிடையாது, ஆனால் முதல் முறையாக என்னுடைய நடிப்பிற்காகப் பாராட்டிய படம் நூறு சாமி” என்றார்.
நடிகை சுவாசிகா தனது சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதுக்கு மேல் தகுதியானவர் என்றும், இந்தியாவில் 'ஆஸ்கர்' விருதுகள் கொடுக்கப்பட்டால் அது சுவாசிகாவிற்குத் தான் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார்
சுவாசிகாவிற்கு இந்திய ஆஸ்கர் கொடுப்பதாக ஒரு தண்ணீர் பாட்டிலை அவார்டாக நினைத்து சுவாசிகாவிற்கு கொடுத்து மகிழ்ந்தார்.