

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் விஜய் ஆண்டனியை ஹீரோவாக பிரபலமாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ பாடல் இன்றும் கேட்கப்பட்டு வரும் ஹிட் பாடல்களில் ஒன்றாகவே இருக்கிறது. இக்கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதுவும் உணர்வுப்பூர்வமாகவே எழுதப்பட்டுள்ளதால், படத்திற்கு, ‘நூறு சாமி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்போது ‘நூறு சாமி’ என்ற படத்தின் மூலம் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19-ல் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் சசி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “ பிச்சைக்காரன் படத்தின் நாயகன், தாயைத் தெய்வமாக மதித்தான். தாயை மனுஷியாக பார்க்க தொடங்கிய படம் ‘நூறு சாமி’. இந்தப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் பேசப்படும். ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பை தந்துள்ளார். ‘நூறு சாமி’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார். இப்படம் பார்க்கிற அனைவரும் படத்தோடு தங்களை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
‛சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துக்குபின், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குபின் நான் இயக்கிய ‘நூறு சாமி’ படம் வர இருக்கிறது. படம் பார்க்கும் அனைவரும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த பல பெண்களை நினைவுப்படுத்தி பார்ப்பார்கள். விஜய் ஆண்டனி இப்படத்தில் நடிக்காவிட்டால் அந்த கேரக்டரில் சசிகுமார் நடித்து இருப்பார். ‘லப்பர் பந்து’ பார்த்துவிட்டு கதையின் முக்கிய கேரக்டரில் சுவாசிகாவை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். கதை அவரை சுற்றி நகருகிறது. சுவாசிகா நடிக்காவிட்டால் பூ பார்வதியை நடிக்க வைக்கலாம் என நினைத்து இருந்தேன்.
விஜய் ஆண்டனி அக்கா மகன் அஜய் தீஷன் முக்கியமான ரோலில் வருகிறார். அவர் சுவாசிகா மூத்த மகனாவும், சோஷியல் மீடியா பிரபலம் சக்தி இன்னொரு மகனாகவும் வருகிறார்கள். வித் லவ் படத்தில் நடித்த காவ்யா அனிலுக்கும் நல்ல ரோல், இதில் பாலாஜி ஸ்ரீராம் என்பவரை இசையமைப்பாளராக ஆக்கியிருக்கிறேன். தெலுங்கில் இந்த படம் வண்டாதேவுலு என்ற பெயரில் வருகிறது. நுாறுசாமி படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெறும், நிஜ வாழ்க்கையில், சமூகத்தில் நல்ல பாதிப்பை, சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன்” என்றார்.
தமிழில் வைகை படத்தின் மூலமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை சுவாசிகா. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், லப்பர் பந்து படத்தில் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். தொடர்ந்து மாமன், ரெட்ரோ, சூர்யாவின் கருப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.