மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம் செய்தார்.
மருதமலை முருகன் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்
Published on

சென்னை,

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. 'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை, தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுவதாக நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர் தற்போது அஜித்துடன் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' மற்றும் கமலின் 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. சூர்யாவும் திரிஷாவும் 'ஆறு' திரைப்படத்தில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகை திரிஷா ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் வருகையை அறிந்த ரசிகர்கள் திரிஷாவை புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் அங்கிருந்து புறப்பட்டு காரில் சென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com