தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்று வந்த நடிகை- வனத்துறையினர் விசாரணை

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்று வந்த நடிகை- வனத்துறையினர் விசாரணை
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.

மலைக்கு தடையை மீறி சென்று வந்த அவர் பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com