நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதை விமர்சித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதை கடுமையாக விமர்சித்தார்.
நடிகைகள் கவர்ச்சி உடைகள் அணிவதை விமர்சித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு
Published on

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது, கதாநாயகிகள், சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் போது அரைகுறையாக ஆபாசமாக உடை அணிந்து உடம்பை காட்டுகிறார்கள்.

பொது நிகழ்ச்சிகளுக்கு எப்படி உடை அணியவேண்டும் என்ற உணர்வு இல்லை. கவர்ச்சி உடை அணிந்து உடம்பை காட்சி பொருளாக காட்டினால்தான் அந்த விழாவுக்கு வரும் டைரக்டர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

நமது கலாசாரம், சமூக உணர்வு எதுவுமே அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் இப்படி பேசுவதால் நிறைய கதாநாயகிகளுக்கு கோபம் வரலாம். ஆனால் அவர்களுக்கு தெலுங்கு தெரியாது என்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேச்சு தெலுங்கு டெலிஷன்களில் விவாதமாக நடந்து வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பல்வேறு பெண்கள் அமைப்புகள் கண்டித்துள்ளன. அந்த அமைப்பினர் கூறும்போது, பெண்களுக்கு எதிராக சினிமா துறையில் பல கொடுமைகள் நடக்கிறது. பட வாய்ப்புக்கு நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். இதையெல்லாம் அவர் கண்டிக்காதது ஏன் என்று கூறியுள்ளனர்.

டி.வி. விவாதத்தில் கலந்து கொண்ட ஆண்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதில் தவறு இல்லை. பெண்கள் கவர்ச்சி உடை அணிவதால்தான் பாலியல் கொடுமைகள் நடக்கிறது என்பதை அவர் சொல்லி இருக்கிறார் என்றனர். எதிர்ப்பை தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com