அதிதி பாலன் விரும்பும் கதாபாத்திரம்

அதிதி பாலன் விரும்பும் கதாபாத்திரம்
Published on

தமிழில் அருவி படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதி பாலன். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படம் மூலம் நடிக்க வந்துள்ளார்.

இதுகுறித்து அதிதிபாலன் அளித்துள்ள பேட்டியில், "நான் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறேன். தங்கர் பச்சான் படங்களில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இதிலும் இருக்கும். இதில் பாரதிராஜா நீதிபதியாகவும், கவுதம் மேனன் வக்கீலாகவும் வருகிறார்கள்.

எனக்கு இந்த படத்தில் நடிக்க நிறைய சுதந்திரம் கொடுத்தனர். வசனங்கள் பற்றி இயக்குனர் தெளிவாக விளக்கி சொன்னார். அருவி படத்துக்கு பிறகு அதே மாதிரியான சீரியஸ் கதாபாத்திரங்களே வந்தன. அந்த இமேஜை மாற்ற நினைத்தேன்.

அதோடு சாதாரணமாக வந்து போகும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்பவில்லை. அழுத்தமான நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

இதனால் பட வாய்ப்புகள் குறைந்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.

கருமேகங்கள் கலைகின்றன படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.

மலையாளத்தில் பிருதிவிராஜுடன் கோல்டு கேஸ், நிவின் பாலியுடன் படவெட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளேன்'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com