சினிமாவுக்கு வர அப்பா விதித்த நிபந்தனை - பகிர்ந்த அதிதி ஷங்கர்


Aditi Shankar reveals the condition imposed by her father Shankar for her acting debut
x

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

சென்னை,

கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ஷங்கர். இவர் இயக்குனர் ஷங்கரின் மகளாவார் .அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

சமீபத்தில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'நேசிப்பாயா' படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் 'பிரேமிஸ்தவா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேற்று தெலுங்கு மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அதற்கு முன்பு, இப்படத்தின் புரமோசனின்போது பேசிய அதிதி ஷங்கர், சினிமாவுக்கு வர அப்பா விதித்த நிபந்தனைகளை நினைவுக்கூர்ந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ' மருத்துவ படிப்பு முடிந்ததும் நடிக்க முயற்சிப்பேன் என்று அப்பாவிடம் சொல்லியிருந்தேன். அவர் நீண்ட நேரம் யோசித்து கடைசியில் ஒரு நிபந்தனையுடன் அனுமதி வழங்கினார். அது என்னவென்றால், நான் வெற்றிபெறவில்லை என்றால் மருத்துவத்திற்கு திரும்ப வேண்டும் என்பதுதான்' என்றார்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். அதன்படி, விஜய் கனகமெடலா இயக்கி வரும் 'பைரவம்' படத்தில் அதிதி நடிக்கிறார். இதன்மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்.


Next Story