'அட்ஜஸ்ட்மென்ட்' செய்தால் ரோல்ஸ் ராய்ஸ் கார் - சீரியல் நடிகை பரபரப்பு புகார்

தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சீரியல் நடிகை பிரதீபா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

'அட்ஜஸ்ட்மென்ட்' செய்தால் ரோல்ஸ் ராய்ஸ் கார் - சீரியல் நடிகை பரபரப்பு புகார்
Published on: 

சென்னை,

திரையுலகில் திரைப்பட வாய்ப்புகளைப் பெறுவதற்காக நடிகைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பட வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சிலர் நடிகைகளிடம் தவறான அணுகுமுறையில் நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து சீரியல் நடிகை பிரதீபா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் திரையுலகில் பெண் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பிரபல இயக்குநர்களிடமிருந்தும் அழைப்புகள் வருகின்றன. இன்றுகூட அப்படியொரு வாய்ப்பு வந்தது. நல்ல பெண் என்றால் புடவை அணிந்திருக்க வேண்டும், கெட்ட பெண் என்றால் குட்டையான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்று இன்னும் நினைக்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.

முதலில், நான் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. பிரபலமான அல்லது வெற்றிகரமான நடிகையாக வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இல்லை. எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக இருந்தால் நடிப்பேன். ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்வதில் எனக்கு விரைவில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆசை காட்டிய மேனேஜர்

பிரபலமான மேனேஜர் ஒருவர் என்னிடம், 'இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் உங்கள் வீட்டின் முன்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்கும்' என்று கூறினார். என்னை நம்ப வைப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து ஆதாரங்களையும் காட்டினார். ஆனால், எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் தேவையில்லை. ஆட்டோவில் பயணம் செய்வதிலேயே நான் வசதியாக உணர்கிறேன்.

நான் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் இன்னும் 40 அல்லது 50 ஆண்டுகள் வாழலாம். எதிர்காலத்தில் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்காக எனக்கென ஒரு கனவு வீட்டை வைத்திருக்கிறேன். அது நிறைவேறாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை.

சுதந்திரமே முக்கியம்

ஒரே மாதிரியான அன்றாட நடைமுறைகள் எனக்குப் பிடிப்பதில்லை. எனக்குத் தேவையானது என்னுடைய நேரமும் சுதந்திரமும்தான். விரும்பும்போது நடனமாட வேண்டும். எனக்குப் பிடித்த, வசதியான ஆடைகளை அணிய வேண்டும். காலையில் கூடுதல் நேரம் தூங்க வேண்டும். மனதில் எண்ணங்கள் தோன்றும்போது எழுதவும் படிக்கவும் வேண்டும்.

சிலர் அடிக்கடி, 'நீங்கள் என்ன புகைக்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். போதைப்பொருட்கள் அல்லது ரசாயனப் பொருட்களைச் சார்ந்து இருந்தால் என்னால் என்னையே மதிக்க முடியாது.

நான் யாராக மாறிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் பார்ப்பதே என் வாழ்க்கையின் நோக்கம். நான் வாழ விரும்புகிறேன். மற்றவர்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

X