

மும்பை,
மிகப்பெரும் பொருட்செலவில் சல்மான் கான் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் டைகர் ஜிந்தா ஹை. இந்த படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பாலிவுட் உலகில் முன்னணி நடிகராக விளங்கும் சல்மான் கானின் படத்திற்கு அனைத்து காட்சிகளையும் கொடுத்து விட்டு, இரண்டு மராட்டிய படங்கள் வெளியிட, ஸ்லாட் கொடுக்கவில்லை என மகராஷ்டிர நவநிர்மான் சித்ரபத் சேனா (MNSC) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் மராட்டிய தலைவர்களும் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.என்.எஸ்.சி கட்சி தலைவர் ஆமே கோபகர் கூறியதாவது: டைகர் ஜிந்தா ஹை உட்பட எந்த ஒரு திரைப்படமும் வெளியாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்கள் ஆட்சேபம் என்னவெனில், ஒரே ஒரு படத்திற்காக அனைத்து முக்கியமான நேரங்களும்(பிரைம் ஸ்லாட்) ஒதுக்கப்பட்டது என்பதும், பிற தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை திரையிட நேரம் கொடுக்கப்படவில்லை என்பதும்தான். திரையரங்குகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு படத்துக்கு ஏகபோக உரிமை எடுத்துக் கொள்வதை சகித்துக்கொள்ள மாட்டோம். மராட்டிய படங்களான 'தேவா' மற்றும் 'கச்சி' ஆகியவற்றை பிரதான நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும்.
படப்பிடிப்புகள் அனைத்தும் மகாராஷ்டிராவில்தான் நடத்தப்படுகின்றன என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படாத பட்சத்தில், அவர்களின் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். மராத்தி பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் சொந்த மாநிலத்திலேயே திரையரங்குகளுக்காகப் பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறது. பெரிய பட நிறுவனங்கள் முன்னதாகவே அனைத்து சினிமா திரையரங்குகளையும் முன்பதிவு செய்துவிடுகின்றன.வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் 'டைகர் ஜிந்தா ஹை' படத்துக்காக சுமார் 95% அரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தான் எதிர்க்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி தியேட்டர் அதிபர்களுக்கு ஆமே கோபகர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.