'கரகாட்டக்காரன்' படத்துக்கு பிறகு... 36 ஆண்டுகள் கழித்து சந்தித்த ராமராஜன் - கனகா ஜோடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

ராமராஜன் - கனகா சந்தித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
சென்னை,
ராமராஜன் - கனகா நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. கிராமத்து மண் வாசனையில், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பட்டி.. தொட்டி.. எங்கும் பட்டையை கிளப்பியது.இசைஞானி இளையராஜா இசையில், "மாங்குயிலே பூங்குயிலே.. இந்த மான் உந்தன் சொந்த மான்.. ஊருவிட்டு ஊரு வந்து... குடகுமலை காற்றில் ஒரு.." என படத்தில் இடம் பெற்ற 9 பாடல்களும் சூப்பர் ஹிட். கவுண்டமணி - செந்தில் காமெடியும் 36 ஆண்டுகள் கழித்தும் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. நடிகை தேவிகாவின் மகளான கனகா, 'கடகாட்டக்காரன்' படத்தில் மூலம்தான் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்துடன் திரையுலகைவிட்டு விடைபெற்றுவிடலாம் என்று அவர் நினைத்தபோதும், படத்தின் மெகா ஹிட், அதன் மூலம் கிடைத்த புகழ், அவரை தொடர்ந்து நடிக்க வைத்தது.
மதுரையில் ஒரு தியேட்டரில் மட்டும் 'கரகாட்டக்காரன்' படம் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1989-ம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு விருது இந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது. கரகாட்டக்காரனை தொடர்ந்து நடிகை கனகா பிசியாக நடிக்கத் தொடங்கினார். ரஜினியுடன் 'அதிசய பிறவி', பிரபுவுடன் 'கும்பக்கரை தங்கையா', விஜயகாந்துடன் 'கோவில் காளை', கார்த்திக்குடன் 'பெரிய வீட்டு பண்ணைக்காரன்', சரத்குமாருடன் 'சாமுண்டி' என 40-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடைசியாக 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நரசிம்மம்' என்ற படத்தில் கனகா நடித்தார். அதன்பின்னர், தாய் தேவிகா இறந்த சோகத்தில் நடிப்பைவிட்டு விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். தந்தையுடனும் சொத்து விஷயத்தில் மோதல் ஏற்பட்டதால், அங்கேயே தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவை சென்று சந்தித்த படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு அடையாளமே காண முடியாத வகையில் கனகா இருந்தார். எப்படி இருந்த கனகா... இப்படி ஆயிட்டாங்களே... என்று அனைவரும் வருத்தப்படும் அளவுக்கு அவரது தோற்றம் இருந்தது. இந்த நிலையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு முத்தையா - காமாட்சி ஜோடி (ராமராஜன் - கனகா) சென்னையில் ஒருசில தினங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அந்தப் படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பலர் நெகிழ்ச்சியில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






