ஏ.ஐ. வீடியோ விவகாரம்; துணிச்சலான ஆண்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - ஜான்வி கபூர்

ஏ.ஐ. வீடியோ விவகாரத்தில் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு நடிகை ஜான்வி கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ. வீடியோ விவகாரம்; துணிச்சலான ஆண்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் - ஜான்வி கபூர்
Published on: 

மும்பை,

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபல நடிகைகளின் முகங்களை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், மிருணாள் தாக்கூர், பிரீத்தி ஜிந்தா, தபு உள்ளிட்ட பலரின் முகங்களை பயன்படுத்தி டீப்-பேக் (Deepfake) வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுள்ளன.

இதனால் அவர்களின் ஆள்மை உரிமையும், நற்பெயரும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டீப்-ஃபேக் மற்றும் டிஜிட்டல் ஆள்மாறாட்டத்திற்கு எதிராக ஏற்கனவே பல பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார்.

ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்'

இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் குறித்து ஆபாசமான முறையில் ஏ.ஐ. மார்பிங் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் 2024-ம் ஆண்டு வெளியான 'தேவரா' படத்தில் வரும் 'சுட்டமல்லி...' என்ற பாடளில் இடம்பெற்ற காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலல் ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கண்டனம்

இந்த விவகாரத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., நடிகர் சிரஞ்சீவி, நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான குஷ்பு உள்ளிட்டோர் நடிகை ஜான்வி கபூருக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை பதிவிட்டதோடு, ஏ.ஐ. மார்பிங் வீடியோக்களை உருவாக்கி, அதனை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், ஏ.ஐ. வீடியோ விவகாரத்தில் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பெண்களை ஒரு பொருளாக கருதி, அவர்களின் அனுமதியின்றி போலி வீடியோக்களை பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவது, பாலியல் வன்கொடுமைக்கு நிகரான ஒரு பெரும் குற்றமாகும். சினிமா துறையில் ஏறக்குறைய அனைத்து பெண்களும் ஏதேனும் ஒரு வடிவத்தில் இந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். உலகெங்கிலும் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒரு பெண்ணின் சம்மதம், தேர்வு மற்றும் அவளது உடலுக்கான மரியாதை ஆகியவை மனிதகுலத்தின் மிக அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனாலும் ஏனோ அது தொடர்ந்து சிக்கலானதாகவே இருந்து வருகிறது.

ஒரு பெண் தொடர்ந்து ஐந்து நாட்கள் 'ஆம்' என்று சொல்லிவிட்டு, ஆறாவது நாள் 'இல்லை' என்றும் சொன்னாலும், அந்த 'இல்லை' மதிக்கப்பட வேண்டும் என்பதை சிலரால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தற்செயலாக ஒரு பெண் குட்டைப் பாவாடை அணிந்தால், அவளது பாவாடைக்கு கீழே கேமராவை வைக்கவோ, அவமதிக்கும் கோணங்களில் படம் பிடிக்கவோ அவள் யாருக்கும் அனுமதி அளிப்பதாக அர்த்தமில்லை. ஒரு பெண் எங்கே தன் எல்லையை வகுக்கிறாள், எதை தேர்வு செய்கிறாள் என்பதெல்லாம் முற்றிலும் அவளுக்கே உரிய முடிவுகளாகும். மற்றவர்களின் எல்லைகளை மீறுவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று மக்களை நம்ப வைக்கும் மனநிலையை நாம் தகர்க்க வேண்டும்.

எது சரி, எது தவறு என்பதை தெளிவாக சொல்லும் தார்மீக குணமும், துணிச்சலும் கொண்ட ஆண்களிடம் இருந்தே மாற்றம் ஏற்படும். அத்தகைய உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, இந்த அத்துமீறலைக் கண்டித்த ஜூனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது, இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்த சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா மற்றும் குஷ்பு ஆகியோருக்கு நன்றி. ஒரு பெண், தன்னை ஒரு மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்று கேட்பது உண்மையிலேயே மிகப் பெரிய விஷயமா? அவளது உடல், அவளது தோற்றம், அவளது எல்லைகள், அவளது தேர்வு.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com