அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான் - கமல்ஹாசன்

மேகதாது அணை பிரச்சினையை எழுப்பியதற்காக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நல்லதுதான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பாராளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரஃபேல் பிரச்சினை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அதிமுக எம்பிக்களின் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையின் போது யாரோ ஒரு எம்பி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பரினை தூக்கி எறிந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து, அதிமுக எம்பிக்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இருந்து அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க அதிமுக எம்பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் அதிமுக எம்பிக்கள் இடைநீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் இடைநீக்கம் செய்தது நல்லது தான் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது,

"அரசியல் கருத்துக்களை சினிமாவில் தெரிவிக்க மாட்டேன். சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்.

நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம். இரண்டையும் இணைக்க விரும்பவில்லை" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com