ஐஸ்வர்யா லட்சுமியின் நேர்மை அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும் - நடிகர் சூரி

சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியும், அக்காவாக சுவாசிகா நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி " என்று தெரிவித்துள்ளார்.






