

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கினார்.
கார் ரேசிங்
இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கிய ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.
பிரான்சில் நடைபெற இருக்கும் கார் ரேசிங்கிற்கு அஜித் குமார் தயாராகி வருவதாக அவரது அதிகாரபூர்வமான எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
அஜித்குமார் கார் ரேசிங் மீதான பற்றால் அதில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் (மே.30) அவரது தாயார் காலமானார். அவரது தாயார் மறைவிற்கு முதல்-அமைச்சர் விஜய் மற்றும் திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் அஜித்குமார் சமீபத்திய பேட்டியில் கார் பந்தயத் திட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் “எனது ‘ரெடான்ட்’ அணியின் மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் உடன் பயணிக்கும் வீரர்கள் என அனைவரும் ஒரு மிகச்சிறந்த குழுவாகச் செயல்பட்டு வருகிறோம். இவர்களுடன் இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. கடந்த மூன்று வருடங்களாக நான் துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர். கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், தற்போதைய பந்தயக் காலங்களில் ஐரோப்பாவில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறேன்.
அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தற்போதே தயார் செய்து வருகிறோம். ‘ஏசியன் லெ மான்ஸ்’ மற்றும் ‘இ.எல்.எம்.எஸ்’ ஆகிய தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம். என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயங்களில் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் ஒவ்வொரு வருடமும் இந்த ‘கிரெவென்டிக்’ தொடரில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன்” என்று பேசியிருந்தார்.
‘ஏசியன் லெ மான்ஸ்’ கார்பந்தய தொடரில் பங்கேற்றுள்ள அஜித் குமாரை, காண சென்ற குடும்பத்தினர் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் நடைபெறவுள்ள ‘ஏசியன் லெ மான்ஸ்’ கார் பந்தயத்திற்காக அஜித் தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த பந்தயத்தில் பங்கேற்பதன் மூலம், அவர் தனது சர்வதேச கார் ரேசிங் பயணத்தை மேலும் வலுப்படுத்த உள்ளார்.