

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
நடிகர் அஜித் 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘ஆசை', 'காதல் கோட்டை', 'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.
1999ம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ படம், ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளால் நிரம்பியிருந்த படமாகும். இதில் ஷாலினி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களுள் ஒன்று, ‘அமர்க்களம்’. இந்த படத்தால்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது. இதில் ரகுவரன், ராதிகா, நாஸர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். அஜித்தின் 25 வது திரைப்படமாகும்.
இந்த நிலையில், அஜித் - ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ படம் மீண்டும் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.