

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் மே 1, 1971ல் செகந்திராபாதில் பிறந்தார். 1993ல் அமராவதி படத்தில் அறிமுகமான அஜித் குமார் தற்போது வரை 63 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 'குட் பேட் அக்லி' வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
நடிகர் அஜித்குமார் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக 'RACING ISN'T ACTING' என்ற ஆவணப் படம் உருவாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அஜித் ரேஸ் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது. ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் தருணம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.