

அஜித் குமாரின் ரேஸிங் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார் 1993ம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ படத்தில் அறிமுகமானார். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
இவர் நடிகர் மட்டுமல்லாமல் கார் பந்தயவீரரும் கூட. ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கி பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.
'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்டநாட்களாக காத்திருந்தநிலையில், தற்போது அந்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் 64-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
அஜித்குமார் ரேஸிங் தொடர்பாக ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் புதிய ஆவணப் படம் உருவாகி வருகிறது.
நடிகர் அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப் படம் "Gladiators - In Pursuit of Challenges". 90 நிமிட ஆவணப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை ரசிகர்கள் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சுற்றுகளில் (Asian Le Mans & 24H Series) தருணங்களை நேரடிப் பதிவுகளாக இந்தப் படம் படம்பிடித்துள்ளது. ரேசிங் களத்தில் அஜித் சந்தித்த தடைகள், பின்னடைவுகள், மற்றும் 2025 துபாய் 24H பந்தயத்தில் அவர் வென்ற போடியம் சாதனை வரை முழுமையான சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் அனுபவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி பார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட சர்வதேச பந்தய வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆவணப்படம் 90 நிமிடங்களாக இருந்தாலும், இது உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், அஜித் குமாரின் ரேஸிங் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.