பிரசாந்த் வர்மாவின் 'மகாகாளி' மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் 'சாவா' நடிகர்?

’மகாகாளி’ இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாகும்.
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா. இவர் பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கி அதன் கீழ் படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பான் இந்திய படமாக வெளியான 'அனுமான்' திரைப்படம் இதன் முதல் படமாகும். அதனைத்தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த யுனிவர்ஸில் 3-வது படத்திற்கு 'மகாகாளி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஹீரோ படமாகும். இயக்குனர் பிரசாந்த் வர்மா கதை எழுத பூஜா அபர்ணா கொலுரு இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் கண்ணா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.
அக்சய் கண்ணா கடைசியாக, விக்கி கவுசல் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'சாவா' படத்தில் நடித்திருந்தார். மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் ஔரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்சய் கண்ணா நடித்திருந்தார்.






