சென்னையின் பிரபல ஆல்பர்ட் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி

ஆல்பர்ட் தியேட்டரில் கடந்த சில வாரங்களாகவே புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல் உள்ளது.
ஆல்பர்ட் தியேட்டர்
ஆல்பர்ட் தியேட்டர்
Published on: 

சென்னை,

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஆல்பர்ட் தியேட்டர் மூடப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பர்ட் தியேட்டர்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மிக அருகில் பிரபல ஆல்பர்ட் தியேட்டர் அமைந்துள்ளது. 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டரில் ஆல்பர்ட் மற்றும் பேபி ஆல்பர்ட் என இரண்டு திரைகள் உள்ளன. இது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ரசிகர்களின் விருப்பமான தியேட்டராக இருந்தது. அவர்களின் பல படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பெருமை இந்த தியேட்டருக்கு உண்டு.

புதுப்படங்கள் திரையிடப்படவில்லை

40 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்ட இந்த தியேட்டர் பழைய கட்டமைப்பு, நவீன வசதிகள் இல்லாதது, ஒலி, ஒளி தொழில்நுட்ப மேம்பாடு இல்லாதது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வரவு போன்ற காரணங்களால் சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல் உள்ளது.

நிரந்தரமாக மூடல்?

ஆல்பர்ட் தியேட்டரில் கடைசியாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரையிடப்பட்டது. இந்த நிலையில் இந்த தியேட்டர் வளாகம் விற்பனைக்கு வரவுள்ளதாகவும், நிரந்தரமாக மூடப்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

வேறு ஏதாவது தியேட்டர் உரிமையாளர்கள் இதைக் கைப்பற்றி சீரமைத்து திரைப்படங்களை வெளியிடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், ஆல்பர்ட் தியேட்டர் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையாலும், அங்கே மது அருந்திவிட்டு தியேட்டருக்கு வரும் சிலராலும் இத்திரையரங்கை மீண்டும் நடத்த வாய்ப்புகள் குறைவுதான் என்றும் கூறப்படுகின்றன.

ரசிகர்கள் சோகம்

சென்னையின் அடையாளங்களாக இருந்த உதயம், சஃபையர், தியாகராஜா போன்ற திரையரங்குகள் காலப்போக்கில் மூடப்பட்டு, வணிக வளாகங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறியுள்ளன. இந்த நிலையில், ஆல்பர்ட் தியேட்டர் மூடப்பட உள்ளதாக பரவும் செய்திகள் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X