வெனிஸ் திரைப்பட விழாவில் சாதனை படைத்த இந்தியர்- பாராட்டிய ஆலியா பட்!

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார்.
மும்பை,
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 6, 2025 வரை இத்தாலியில் உள்ள வெனிஸ் லிடோவில் நடைபெற்றது. அதில் "சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ்" (songs for forgotten trees) எனும் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அனுபர்ணா ராய் வழங்கப்பட்டது.
இதன் மூலம் இந்த பிரிவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுபர்ணா ராய் பெற்றிருக்கிறார். சுமார் 80 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் இயக்குனர் அனுபர்ணா ராயின் முதல் படைப்பு. இதற்கு முன் ‘ரன் டூ தி ரிவர்’ எனும் குறும்படத்தை இவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விருதை பெற்ற சாதனை படைத்த இயக்குனர் அனுபர்ணா ராயை பாராட்டி நடிகை ஆலியா பட் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சாங்ஸ் ஆப் பர்கெட்டன் ட்ரீஸ் எனும் படத்திற்காக வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற அனுபர்னா ராய்க்கு மிகப்பெரிய வாழ்த்துகள். இந்திய சினிமாவுக்கு என்ன அழகான ஒரு தருணம். வாழ்த்துகள்" அனுபர்னா ராய் எனக் குறிப்பிட்டுள்ளார்.






