அல்லு அர்ஜுனின் “ராக்கா” படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுனின் “ராக்கா” படத்தின் படப்பிடிப்பு  அப்டேட்
Published on: 

இயக்குநர் அட்லியின் ‘ராக்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘ராக்கா’ திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் உலகத் திரைப்படம்

பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் ‘அவதார்’ படம் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களாக ‘ராக்கா’ எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதனால், இப்படம் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த ‘ராக்கா’

நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 37 நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக நபர்களைக் கொண்டு நேரலை மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் படம்பிடிக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் உலக சாதனையை இப்படம் படைத்திருக்கிறது.

அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’ படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் அமைக்கப்பட்ட சிறப்பு அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்று வந்த ‘ராக்கா’ படப்பிடிப்பு அடுத்ததாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இதனை துபாயில் நடத்தத் திட்டமிட்ட அட்லி, போர் பதற்றம் காரணமாக ஐதராபாத்திலேயே படமாக்க ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

X