

மும்பை,
சட்ட விரோத கட்டிடம் தொடர்பாக மெகா ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் விடுத்துள்ளது. கோரகனில் உள்ள புதிய பிலிம் சிட்டியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் அனுமதி பெற்றதற்கு மாறாக விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனில் கால்கலி என்பவர் பெற்ற விவரத்தின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இந்த பங்களா, அனுமதி வழங்கப்பட்ட, வரைபடத்தின் அடிப்படையில் கட்டப்படவில்லை என்பதால் 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் நேட்டீஸ்அனுப்பபட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, பங்கஜ் பலாஜி, சஞ்செய் வியாஸ், ஹரேஷ் கந்தல்வே, ஒபராய் ரியல்டி உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விதிகளை மீறி கட்டப்பட்டதை அகற்ற வேண்டும் அல்லது புதிய வரைபட திட்டத்தை கட்டிட பரிந்துரை துறையிடம் சமர்பிக்க வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நோட்டீஸை தொடர்ந்து கட்டிட வடிவமைப்பாளர் தரப்பில் ஷாஷாங் கோகில் என்பவர் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி சமர்பித்துள்ளார். ஆனல், இதையும் மும்பை மாநகாரட்சி மார்ச் 17 ஆம் தேதி நிராகரித்துள்ளது.