சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதாக அமிதாப் பச்சன் பதிவு

அமிதாப் பச்சன் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதாக அமிதாப் பச்சன் பதிவு
Published on: 

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் தனது சமூக ஊடகப் பதிவுகளில் இருந்து சில நாட்கள் தற்காலிகமாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் “ஷஹென்ஷா” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1969-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், "ஷோலே, டான், தீவார், குலி, பா, பிகூ" உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து இந்திய திரையுலகில் தனக்கென அழியாத முத்திரையை பதித்துள்ளார். 200 திரைப்படங்களுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார். ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அமிதாப் தற்போது நடித்துவரும் படங்கள்

அமிதாப் பச்சன் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும், ரிபு தாஸ்குப்தா இயக்கும் ‘செக்சன் 84’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சோனி தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘கோன் பனேகா குரோர்பதி’ வினாடி-வினா நிகழ்ச்சியையும் அவர் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

அமிதாப் பச்சனின் உருக்கமான பதிவு

தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அமிதாப் பச்சன் பகிர்ந்திருப்பதாவது, “மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் சில நாட்கள் முழுமையாக ஓய்வெடுத்து உடல்நலனைத் தேற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளேன். எனவே, என்னால் தற்போது எந்தப் பதிவுகளையும் எழுத இயலவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அமிதாப் பச்சன் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் சமூக வலைத்தளங்களுக்குத் திரும்ப வேண்டும் என திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com