

சென்னை,
ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த படம் 'மதராசப்பட்டினம்'. 2010 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம் பெற்ற 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவி , ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை முனுமுனுக்காதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த பாடலுக்கு இசை அமைத்தார்.
ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடலுக்கு இசையமைத்தது எப்படி என்பது தொடர்பாக சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். ஜிவி பிரகாஷ் கூறுகையில், இசையமைப்பாளருக்கு ஐடியா எங்கிருந்து கிடைக்கும் என்றே தெரியாது.
என்னுடைய மிகப்பெரிய ஹிட் பாடல்களில் ஒன்று ’மதராசப்பட்டினம்’ படத்தில் வந்த `பூக்கள் பூக்கும் தருணம்': அந்தப்பாடலை பைக் பயணத்தின் போதுதான் கம்போஸ் செய்தேன். எனது நண்பருடன் பைக்கில் போய்க்கொண்டு இருந்த போது திடீரென படத்தின் ஸ்கிரிப்ட் தோன்றியது. அது பற்றி சிந்தித்துக்கொண்டு வரும் போது , `தான தோம் தன னா' என்ற ட்யூன் கிடைத்தது. உடனடியாக பைக்கை நிறுத்தி மொபைலில் ட்யூனை பதிவு செய்தேன். பின்னர் வீட்டுக்கு வந்ததும் பியானோவில் பாடலை வாசித்தேன்” என்றார்.