டிரெய்லர் வெளியீட்டு விழாவிலிருந்து வெளியேறிய பிரபல நடிகர்

நடிகர் நானா படேகர் ‘ஓ ரோமியோ’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவிலிருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா படேகர். தமிழில், காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.
தற்போது, நானா படேகர் நடிகர்கள் சாகித் கபூர், டிப்தி திம்ரி நடிப்பில் உருவான‘ஓ ரோமியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் நானா படேகர் வந்தார். ஆனால், இயக்குநர் விஷால் பரத்வாஜ் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நதிவாலா தன்னை 1 மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டதாகக் கூறி நிகழ்வில் கலந்துகொள்ளாமல் சென்றார்.
நிகழ்வில் பேசிய விஷால் பரத்வாஜ், “நானும் நானா படேகரும் 27 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தாலும் இப்படத்தில்தான் முதல்முறையாக இணைகிறோம். அவர் சக மாணவர்களைக் கிண்டலடிக்கும் பள்ளி மாணவன் போன்றவர். எப்போதும் அவரைச்சுற்றிய விஷயங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பார். இந்த நிகழ்விலிருந்து அவர் வெளியேறியது எங்களுக்கு வருத்தத்தைத் தரவில்லை. காரணம், 1 மணிநேரம் வரை காத்திருந்து பின் கிளம்பிச் செல்வதுதான் அவரின் ஸ்டைல். அதுதான் நானா படேகர்” என அவரைப் பாராட்டினார்.






