

சென்னை,
இந்தத் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின், தற்போது தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருக்கும், சன் நெட்வொர்க் நிறுவனத்தின் செயல் இயக்குநரும், தொழிலதிபருமான காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக நவம்பர் 10-ம் தேதி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இந்தத் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த திருமணப் புகைப்படங்களை அனிருத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அவை இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், திருமண விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்றது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கிரீஸ் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், சன் நெட்வொர்க்-ன் செயல் இயக்குநருமான காவ்யா மாறன் - இசையமைப்பாளர் சகோதரர் அனிருத் ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், நாளை (நவம்பர் 21) சென்னையில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய், அஜித் குமார், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.