நா.முத்துகுமார் நினைவு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு - பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு!

பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு வரும் ஜூலை 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வந்த நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த 'வீரநடை' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு தனது 41-வது வயதில் உயிரிழந்தார்.
நா.முத்துக்குமாரின் 50-வது ஆண்டு பொன்விழாவை, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் ஜூலை 19-ந்தேதி நேரு ஸ்டேடியத்தில் 'ஆனந்த யாழை' என்ற பெயரில் இசை கச்சேரி நடக்கிறது.
திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே.பிரசன்னா, பாடகர்கள் திப்பு, உத்ரா, சைந்தவி, ஹரினி, சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் லிங்குசாமி, ராம், விஜய், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.






