

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்காக அட்டாரி, வாகா எல்லையில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது குழுவினர் உடன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மெய்ன் வாபஸ் ஆவுங்கா’. இதில் தில்ஜித், நசுருதீன் ஷா, வேதாங் ரெய்னா, ஷார்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் விதமாக ‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்’ என்ற தலைப்பில் அட்டாரி - வாகா எல்லையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது குழுவினர் உடன் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினார். இந்த இடத்தில் ரகுமான் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். குறிப்பாக அவரது இசையில் வெளியான ‘வந்தே மாதரம்’ஆல்பம் மீண்டும் நேரலையில் பாடப்பட்டபோது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘ஜெய் ஹோ’ பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. படத்தின் புரமோஷன் அல்லாமல், ராணுவ வீரர்களை சிறப்பிக்கும்படியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.