

சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிலம்பரசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ‘வடசென்னை’ படம் நடந்த காலகட்டத்தில் மற்றொரு இடத்தில் நடக்கும் கதை என்று வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இதனை தற்போது சமுத்திரக்கனியும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ‘அரசன்’ படம் குறித்து, “நானும் ‘அரசன்’ படத்தில் நடிக்கவுள்ளேன். இதில் சிம்பு – தனுஷ் மோதல் இருக்குமா என்று தெரியாது. நான் இருக்கிறேன் என்று வெற்றிமாறன் கூறினார். ‘அரசன்’ படத்தின் கதையின் அனைத்து சம்பவங்களும் இருக்கிறது. ஒவ்வொரு முறை வெற்றிமாறன் கதையைச் சொல்லும் போது, அது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை. அதைத் தவிர எதையும் இப்போதைக்கு சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.
’வடசென்னை’ படத்தில் குணா கதாபாத்திரத்தில் நடித்தவர் சமுத்திரக்கனி. அவருடன் அமீர், கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தற்போது அவர்கள் அனைவருமே ‘அரசன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.