

ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அங்கு வில்லன்களுடன் அருண் விஜய் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சியொன்றை படமாக்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அருண் விஜய்யின் வலது தோள்பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜேஷ், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு, அம்மு அபிராமி, போஸ்வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். இயற்கை, தவம், ஜனனம், மலைமலை, தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அருண் விஜய்க்கு குற்றம் 23 வெற்றிகரமாக ஓடி திருப்பு முனையாக அமைந்தது.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக வந்தார். மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றார். தற்போது ஹரி படத்தையும் சேர்த்து 6 புதிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.