அருண் விஜய்யின் அதிரடி ஆக்ஷனில் "ரெட்ட தல"- சினிமா விமர்சனம்

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படம் ரெட்ட தல.
அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அதிரடி ஆக்ஷன் படம் ரெட்ட தல. அருண் விஜய்யும், சித்தி இத்னானியும் நட்பாக பழகி, காதலர்களாக மாறுகிறார்கள். பணத்தாசை பிடித்த சித்தி இத்னானி, அருண் விஜய்யை திருமணம் செய்துகொள்ள விரும்பாமல், வெளிநாட்டுக்கு பறக்க துடிக்கிறார்.
இதற்கிடையில் உருவத்தில் தன்னைப் போலவே இருக்கும் பெரிய கோடீஸ்வரனை அருண் விஜய் சந்திக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். இந்த ரகசியத்தை தெரிந்துகொள்ளும் சித்தி இத்னானி, 'அந்த கோடீஸ்வரனை கொன்று அந்த இடத்துக்கு நீ வந்தால் இருவருமே சுகபோகமாக இருக்கலாம்' என தூபம் போட, அவரை கொலை செய்து கோடீஸ்வரனாகிறார் அருண் விஜய்.
ஆனால் கொலை செய்யப்பட்ட அந்த கோடீஸ்வரன் பரோலில் வந்த கொலைக் குற்றவாளி என்றும், கோவாவில் பெரிய டான் என்றும், அவரை கொல்ல ஒரு கும்பல் வெறியுடன் அலைவதும் தெரியவர இருவருமே அதிர்ந்து போகிறார்கள். அருண் விஜய் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? அவர் எடுக்கும் அடுத்தடுத்த முடிவுகள் தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
வழக்கம்போல 'ஆக்ஷன்' அவதாரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார், அருண் விஜய். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உருவத்தில் வித்தியாசம் பெரியளவில் தெரியவில்லை என்றாலும், நடை-உடை-பாவணையில் வெளுத்துக் கட்டியுள்ளார்.
சித்தி இத்னானி அழகாலும், பேச்சாலும் வசீகரிக்கிறார். அவரது கதாபாத்திரத்தை இன்னும் அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம். தான்யா ரவிச்சந்திரனும் கடமைக்கு என வந்து போகிறார். யோகிசாமி, ஹரிஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் என அனைவரது நடிப்பிலும் நிறைவு. ஒரே மாதிரியாக நடிக்கும் ஜான் விஜய் இந்த முறையும் கடுப்பேற்றுகிறார்.
டிஜோ டாமியின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது. சாம் சி.எஸ். இசை 'தெறி'க்கிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பலம். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் தேவை. மாப்பிள்ளை நன்றாக இருந்தால் போதுமா, அவர் போடும் சட்டையும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.
சினிமாத்தனமான காட்சிகள் நிறைய இருந்தாலும், பரபரப்புக்கு குறைவின்றி படத்தை நகர்த்தி முடித்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன். ரெட்ட தல படம், பேராசையே பெரும் துன்பத்திற்கு காரணம் என்ற கருத்துடன் புத்தரின் போதனைகளை கூறி நிறைவு பெறுகிறது.






