பொங்கல் ரேஸில் களமிறங்கும் ஆர்யாவின் 'வேட்டுவம்' - வீடியோ வெளியிட்டு அறிவிப்பு

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பொங்கல் ரேஸில் களமிறங்கும் ஆர்யாவின் 'வேட்டுவம்' - வீடியோ வெளியிட்டு அறிவிப்பு
Published on: 

சென்னை,

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' திரைப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் 'வேட்டுவம்'

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பா.இரஞ்சித், தற்போது 'வேட்டுவம்' படத்தை எழுதி இயக்கி வருகிறார். கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மேலும், சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கேங்ஸ்டர் பின்னணியில் அறிவியல் புனைவு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'வேர்ல்ட் ஆப் வேட்டுவம்' அறிமுக வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

பொங்கல் வெளியீடு

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு தள வீடியோ வெளியீடு

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பொங்கல் வெளியீட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

X