"ராமாயணம்" படத்தில் ஊர்மிளாவாக நடிக்கும் அசாம் நடிகை

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ராமாயணம்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ராமாயணம். இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தில் ரன்பீர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.
நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.
அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ராமனின் தம்பி லட்சுமணன் மனைவி ஊர்மிளாவாக அசாம் நடிகை சுரபிதாஸ் நடிக்க உள்ளார். 27 வயதான சுரபி தாஸ் ராமாயணம் படத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ரன்பீர் கபூரை விட சாய் பல்லவியுடன் தான் படப் பிடிப்பில் அதிக நேரம் செலவிட்டேன். அவர் மிகவும் நல்லவர். இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.






