

சென்னை,
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இதில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30ந் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையில், கர படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வெற்றி மாறன் கர திரைப்படம் பற்றியும், வடசென்னை 2 பற்றியும் பேசியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், "எனக்கு இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் முதல் திரைப்படம் மிகவும் பிடிக்கும். தனுஷ் என்னிடம் அதுபற்றி நிறைய பேசியுள்ளார். "கர" திரைப்படம் பற்றி என்னிடம் பேசிய அனைவருமே படம் குறித்து நல்ல விஷயங்களையே கூறினர்.
வழக்கமாக திரைப்படங்களை குறை சொல்பவர்கள் கூட "கர" திரைப்படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். வடசென்னை 2 திரைப்படத்தை பொருத்தவரை, விரைவில் நாங்கள் அப்டேட் கொடுப்போம்," என்றார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படத்திற்கான அப்டேட்டை கேட்டு வருகின்றனர். இதனிடையே விரைவில் வடசென்னை 2 படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.