பணம் பறிக்க முயற்சி.... முன்னாள் மனைவி மீது நவாசுதீன் சித்திக் புகார்

பணம் பறிக்க முயற்சி.... முன்னாள் மனைவி மீது நவாசுதீன் சித்திக் புகார்
Published on

தமிழில் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தியில் பிரபல நடிகராக இருக்கிறார். நவாசுதீன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதாகவும் அவரது முன்னாள் மனைவி அலியா குற்றம் சாட்டி இருந்தார். போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் அமைதியாக இருப்பதால் கெட்டவனாக பார்க்கிறார்கள். நானும், அலியாவும் ஏற்கனவே விவாகரத்து செய்து விட்டோம். குழந்தைகளுக்காக எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனது குழந்தைகளை 45 நாட்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை.

பணத்துக்காக பிள்ளைகளை அலியா துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்து இருக்கிறார். குழந்தைகள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். அலியாவுக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்து வருகிறேன். கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து செலவுகளையும் கவனிக்கிறேன். துபாய் செல்வதற்கு முன்பு மாதம் ரூ.5 முதல் 7 லட்சம் வரை கொடுத்தேன். சொகுசு கார்கள் வாங்கி கொடுத்தேன். அவற்றை விற்று விட்டார்.

துபாயில் அலியா தங்கி உள்ள வீட்டுக்கு வாடகை கொடுக்கிறேன். அலியாவுக்கு பணம்தான் முக்கியம். பணம் பறிக்க என்மீது வழக்குகளை போட்டு இருக்கிறார். என்னை மிரட்டுகிறார். சட்டத்தை நம்புகிறேன். வழக்குகளில் வெல்வேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com