

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டியின் தமிழ் பதிப்பாக இது தயாரானது. படப்பிடிப்பு முடிந்ததும் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லை.
எனவே முழு படத்தையும் கைவிடுவதாகவும் வேறு இயக்குனரை வைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார். இதனால் ரூ.15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. படத்தின் தலைப்பை ஆதித்ய வர்மா என்று மாற்றி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார்கள். துருவ் தோற்றத்தையும் மாற்றினர். ஆதித்ய வர்மா படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரீசாயா டைரக்டு செய்தார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து தற்போது முடிவடைந்துள்ளது. டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்துக்கு பாலா திடீர் எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வர்மா படத்துக்காக தன்னால் எடுக்கப்பட்ட காட்சிகள் எதுவும் ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெறக்கூடாது என்றும், மீறி இருந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோட்டீசுக்கு பதில் அனுப்புவது குறித்து படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.