கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைப் படத்திற்கு தடை : கர்நாடக மந்திரி சிவராஜ்


கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைப் படத்திற்கு தடை : கர்நாடக மந்திரி சிவராஜ்
x
தினத்தந்தி 28 May 2025 9:55 PM IST (Updated: 28 May 2025 10:02 PM IST)
t-max-icont-min-icon

கன்னடம் குறித்து பேசியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகத்தில் அவரது தக் லைப் படத்தை தடை செய்வோம் என்று கர்நாடக மந்திரி கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' பட விழாவில் பேசும்போது, தமிழில் இருந்து பிறந்தது கன்னட மொழி என்று கூறினார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசனை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதாவது பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னட எழுத்தாளர்கள், திரைத்துறையினர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னடத்திற்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை" என்றார். கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:- எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என்பது பற்றி கூற அவர் ஒன்றும் வரலாற்று நிபுணர் இல்லை. 2½ ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கன்னட மொழிக்கு இந்திய வரைபடத்தில் தனி அடையாளம் உள்ளது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது. கன்னடர்கள் பிற மொழிகளை வெறுப்பவா்கள் அல்ல. ஆனால் கன்னட நாடு, மொழி, மக்கள், நீர், நிலம் போன்ற விஷயங்கள் வரும்போது, சுயமரியாதையை எப்போதும் இழக்க மாட்டார்கள்" என்று சாடியிருந்தார்.

இந்த நிலையில், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி பெங்களூருவில் கூறுகையில், "கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன். கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்" என்று கூறினார்.

1 More update

Next Story