கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்': கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு படையெடுப்பு

கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்’ திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
கர்நாடகாவில் வெளியாகாத 'தக் லைப்': கன்னட கமல் ரசிகர்கள் ஓசூர் தியேட்டர்களுக்கு படையெடுப்பு
Published on

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

சமீபத்தில் நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல்ஹாசன் தரப்பு வாதிட்டதையடுத்து, பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தியேட்டர்களில் 'தக் லைப்' திரைப்படம் வெளியாகாத நிலையில் அவர்கள் எல்லையில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுல்ள ஓசூர் தியேட்டர்களை நேக்கி படையெடுக்கின்றனர் ஓசூரில் உள்ள தியேட்டர்களில் 'தக் லைப்' திரைப்படத்தை பார்க்க பெங்களூரில் வசிப்பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஓசூரில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் இன்றும், நாளையும் ஓசூரில் உள்ள அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட் முழுவதுமாக புக் ஆகிவிட்டது. அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

ஓசூரில் உள்ள திரையரங்கில் கர்நாடகா மாநிலத்தவர்கள் வருகை தந்து பட்டாசு வெடித்து, டிஜே நிகழ்ச்சிகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமலின் கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் மற்றும் கற்பூரம் ஏற்றியும் உற்சாகமடைந்தனர்.

இது குறித்து கர்நாடக மாநில ரசிகர்கள் கூறும்போது, "கமலின் 'தக் லைப்' திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இதற்காக பல லட்சம் செலவு செய்து கட் அவுட் பேனர்கள் என தடபுடலான ஏற்பாடு செய்திருந்தோம். இந்நிலையில் கன்னட மொழி குறித்து கமல் பேச்சால் கர்நாடக மாநிலத்தில் 'தக் லைப்' திரைப்படம் வெளியாகவில்லை . இதனை எங்கள் மாநிலத்தில் அரசியல் ஆக்கிவிட்டனர். சினிமாவுக்கு தடை போடலாம் ஆனால் ரசிகர்களான எங்களுக்கு தடை போட முடியாது. அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த கமல் ரசிகர்களும் ஓசூரில் படம் பார்க்க வந்துள்ளோம். இங்கு தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களை விட 80 சதவீதம் கர்நாடக மாநிலம் ரசிகர்கள்தான் அதிகமாக உள்ளனர்." என கூறினர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com