

சென்னை,
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி "இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பாராதிராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழின் குரல்... ஒரு அசல் திரைப்பட இயக்குநர். ஒரு ஜாம்பவான். எந்தவொரு திறமையையும் ஊக்குவிக்க ஒருபோதும் மறக்காதவர்... உங்கள் இயக்கத்தில் உங்களுடன் பணியாற்றியதும், உங்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றியதும், உங்களுடன் பலமுறை இசை பற்றி விவாதித்ததும் உண்மையிலேயே கிடைத்த பாக்கியம்... தமிழ் சினிமாவின் உண்மையான ஆசான். உங்கள் இழப்பு ஆழமாக உணரப்படும். பாரதிராஜா சார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.