திரைக்கு வர இருக்கும் பெரிய படங்கள்

திரைக்கு வர இருக்கும் பெரிய படங்கள்
Published on

திரையுலகினருக்கு நடப்பு வருடம் சிறப்பான ஆண்டாகவே தொடர்கிறது. வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன், ஜெயிலர் உள்ளிட்ட பெரிய படங்கள் நல்ல வசூலையும், சிறிய படங்கள் திருப்தியான வருமானத்தையும் கொடுத்துள்ளன. வரப்போகும் நான்கு மாதங்களும் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களும் வசூல் குவிக்கும் என்ற நம்பிக்கையில் பட உலகினர் இருக்கிறார்கள்.

அடுத்தடுத்து திரைக்கு வரும் பெரிய நடிகர்களின் படங்கள் விவரம்:-

அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா நடித்துள்ள `இறைவன்' படம் வருகிற 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதே நாளில், துல்கர் சல்மானின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உரிய படமான `கிங் ஆப் கோதா' படமும் வெளியாக உள்ளது. ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள `ஜவான்' படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 7-ந் தேதி ரிலீசாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15-ந் தேதி விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள `மார்க் ஆண்டனி' படம் வருகிறது. டைம் டிராவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி உள்ளது. அதே நாளில் `சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள `சந்திரமுகி 2' படமும் திரைக்கு வருகிறது.

பிரபாஸ், சுருதிஹாசன் நடித்துள்ள `சலார்' படம் செப்டம்பர் 28-ந் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாகவும் அவருடன் சஞ்சய்தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், திரிஷா, மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ள `லியோ' படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள `அயலான்' படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 12-ந்தேதி வெளியாக உள்ளது. இதுபோல் கார்த்தி நடித்துள்ள `ஜப்பான்' படமும் தீபாவளிக்கு வருகிறது.

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகி உள்ள `ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமும், நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள `கேப்டன் மில்லர்' படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. அடுத்தடுத்து வரும் பெரிய நடிகர்களின் படங்களால், அடுத்த 4 மாதங்களும் ரசிகர்களுக்கு திருவிழாக்கோலமாக அமையப்போகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com