

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசப்பட்ட தனது கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு விஜய் சேதுபதியின் விளக்கம் அளித்துள்ளது போன்ற புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.
தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.
தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த சர்ச்சை விவகாரங்களுக்கு தற்போது விஜய் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமைக்கான புதிய புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த புரோமோவில் “இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறப்படும் கருத்துகள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் எனக்கும் மட்டுமேயானது. இது வெளியில் இருக்கும் எந்தவொரு நபரையோ அமைப்பையோ குறிப்பிட்டு பேசியதில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை கடந்த வாரமே கூறி இருக்க வேண்டும். நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என இருந்தேன். தற்போது இதனைத் தெளிவுப்படுத்த வேண்டிய தேவை இருந்தது” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.