

நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இம்முறை சட்டப் பேரவையை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது. ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.
போட்டியாளரை நெறிப்படுத்த அவர் “தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்னைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை” என பேசியிருந்தார்.
இந்த வார இறுதி நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதல்-அமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை பார்த்து கடுப்பான விர்ச்சுவல் வாரியர்ஸ், விஜய் சேதுபதி மீது முன்பு எழுந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் லிஸ்ட் போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.